Skip to main content

"உன்னை எந்த பூஜையிலும் யாரும் வைக்க மாட்டார்கள்''

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

விஷ்ணு பாத் மந்திர்... அதாவது விஷ்ணு பாத ஆலயம்... இது பீஹாரிலிருக்கும் கயாவில் உள்ளது.ஆதிகாலத்திலிருந்தே இந்த ஆலயம் இருந்து வருகிறது. 40 சென்டிமீட்டர் அளவில் இங்கு விஷ்ணுவின் பாதம் உள்ளது. அந்த பாதம் ஒரு பாறை யின்மீது ஆழமாகப் பதிந்திருக்கிறது. அகல்யாபாய் ஹோல்கர் என்ற மகாராணி இந்த ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டியிருக்கிறாள்.இந்த ஆலயம் "பால்கு' நதியின் கரையில் அமைந் துள்ளது.விஷ்ணுவின் பாதத்தை "தர்மசிலா' என்கின்றனர்.சிலா என்றால் கல் என்று பொருள். பிராமணர்களில் ஒரு பிரிவினரான பூமிகர் அந்தணர்கள் இந்த ஆலயத்தை பழங்காலத்திலிலிருந்தே வழிபட்டு வருகிறார்கள். இப்போது ப்ரம்மகல்பித் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்தில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். இவர்களை பண்டாரங்கள் அல்லது புரோகிதர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.இங்கு ராமானுஜர், மாதவர், சைதன்யா மகாபிரபு, ராமகிருஷ்ணர் ஆகியோர் வழிபட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் கலாகர் என்ற அரக்கன் அந்த இடத் தில் பல அக்கிரமங்களைச் செய்திருக்கிறான். அவனால் இன்னல்களுக்கு ஆளான தேவர்கள், பகவான் விஷ்ணுவிடம் தங்களின் நிலைமையை முறையிட்டனர்.விஷ்ணு தன் வலது காலால் கலாகரனின் தலையில் மிதித்து பூமிக்குள் ஆழ்த்தினார்.அப்போது அவரது பாதம் பூமியில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த இடத்தில் கலாகரனுக்கு மோட்சம் கிடைத்தது. அப்போது விஷ்ணு "இந்த இடத்திற்கு யார் வந்து பித்ரு தர்ப்பணம் செய்கிறார்களோ அவர்களுக்கு நற்கதி கிட்டும்' என்றருளினார்.அதனால் ஏராளமானவர்கள் இங்கு வந்து பித்ரு தர்ப்பணம் செய்கிறார்கள்.கயாவிலிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் "ப்ரேத் சிலா' என்ற இடம் இருக்கிறது.

vishnupad gaya mandir

​​அங்குதான் பித்ரு தர்ப்பணம் நடத்தப்படுகிறது.இந்த ஆலயத்திற்கு ராமனும் சீதையும் வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது. அங்கு சீதை, தசரதனுக்காக பிண்ட தானம் செய்தாளாம்.வால்மீகி ராமாயணத்தில் இந்த சம்பவம் வருகிறது. வனவாச காலத்தில், மஹாளய பட்சத்தில் தசரதனுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக ராமன், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் கயாவுக்கு வந்திருக்கின்றனர்.தர்ப்பணம் செய்ய தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக ராமனும், லட்சுமணனும் வெளியே சென்றனர். சீதை மட்டும் தனியாக இருந்திருக்கிறாள்.அப்போது மதிய வேளை. தர்ப்பணம் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது! சீதைக்கு அளவற்ற பதற்றம். அப்போது தசரதனின் ஆன்மா அவளிடம், "உடனடியாக பிண்டதானம் செய்' என்றதாம். சீதைக்கோ என்ன செய்வதென்று குழப்பம்!வேறுவழியின்றி, பால்கு நதியையும், நதியின் கரையிலிருந்த ஆலமரத்தையும், அங்கு காணப்பட்ட கேத்கி மலரையும், அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவையும் சாட்சிகளாக வைத்து, சீதை அங்குள்ள மண்ணை எடுத்துப் பிண்டதானம் செய்திருக்கிறாள். எல்லாம் முடிந்தபிறகு, ராமனும் லட்சுமணனும் அங்கு வந்திருக்கிறார்கள். நடந்த சம்பவத்தைக் கேட்ட அவர்கள் "எந்த பொருட்களும் இல்லாமல், நீ எப்படி பிண்ட தானம் செய்தாய்? இதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா?' என்று கேட்டனர்.

அதற்கு சீதை நதியையும், மலரையும், பசுவையும், ஆலமரத்தையும் சாட்சிகளாக வைத்ததைக் கூறினாள்.அதைப்பற்றி ராமனும், லட்சுமணனும் விசாரிக்க முற்பட்டபோது நதியும், பசுவும், மலரும் "அப்படியொரு விஷயமே நடக்கவில்லை' என்று பொய் கூறிவிட்டன. ஆலமரம் மட்டும் "நடந்த சம்பவம் உண்மை' என்று கூறியது. சீதை தசரதனை வேண்டிக்கொள்ள, தசரதன் ஒளி வடிவத்தில் வந்து "சீதை எனக்கு தர்ப்பணம் செய்தது உண்மை' என்றாராம்.அதைத் தொடர்ந்து சீதை பொய்கூறிய மூவருக்கும் சாபமிட்டாள்.பால்கு நதியைப் பார்த்து 'நீ எப்போதும் வறண்டுபோன நிலையிலேயே இருக்க வேண்டும்' என்றும், பசுவிடம், "உன்னை அனைவருமே வழிபடுவார்கள்.

ஆனால் நீ மிச்சம் மீதியைத்தான் சாப்பிட வேண்டும்' என்றும், கேத்கி மலரைப் பார்த்து "உன்னை எந்த பூஜையிலும் யாரும் வைக்க மாட்டார்கள்' என்றும் சபித்தாளாம்.உண்மையைக் கூறிய ஆலமரத்திடம், "நீ நீண்ட ஆயுளுடன் வாழ்வாய். எல்லாருக்கும் நல்லவற்றைச் செய்வாய். அனைவருக்கும் நிழல் தருவாய். எந்தப் பெண் உன்னை வந்து வழிபடுகிறாளோ, அந்தப் பெண்ணின் கணவனுக்கு நீண்ட ஆயுள் நிச்சயம் கிடைக்கும்' என்று வரமருளினாளாம்.பிண்ட தர்ப்பணம் செய்பவர்கள் கயாவுக்கு வந்து அதைச் செய்து முடித்து விஷ்ணுவின் அருளைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு பித்ருக்களின் சாபத்திலிலிருந்து விடுதலை கிடைக்கிறது.சென்னையிலிலிருந்து கயாவிற்குச் செல்லவேண்டு மென்றால், கயா அதிவேக ரயிலில் 2,345 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவேண்டும். 39 மணி நேரப் பயணம். வாரத்திற்கு ஒருமுறை, திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது.பாட்னா விமான நிலையத்திலிருந்து 135 கிலோ மீட்டர் தூரத்தில் கயா உள்ளது.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

“பா.ஜ.கவை சோதனை செய்வதற்காகவே வீடியோ வெளியிட்டேன்” - விமர்சனங்களுக்கு தேஜஸ்வி பதிலடி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Tejaswi's response to criticism

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நாடு முழுவதும் இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்தும், இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார். இதனால், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வந்த தேஜஸ்வி யாதவின் பதவி பறிக்கப்பட்டது. இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், சிபிஐ எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று (09-04-24) தேஜஸ்வி யாதவ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போது மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், “கூட்டணி கட்சி தலைவரான முகேஷ்  இன்று மீன் கொண்டு வந்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருப்பதால் வெறும் 10 - 15 நிமிடங்கள் தான் இடைவேளை இருக்கும். அதற்குள் சாப்பிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நவராத்திரி நேரத்தில், தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவதாக பா.ஜ.க அவரை கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்நிலையில், அந்த வீடியோ குறித்து பீகார் துணை முதல்வர் விஜய் சின்ஹா கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், “ஒரு சிலர் தங்களை சனாதனத்தின் மகனாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், சனாதனத்தின் மதிப்புகளை காப்பாற்றுவதில்லை. நவராத்திரி நேரத்தில் யாராவது மீன் சாப்பிடும் வீடியோவை பதிவிடுவார்களா? இதன் மூலம் ஏமாற்று அரசியலில் ஈடுபடுகிறீர்கள்” என்று கூறினார்.

பா.ஜ.கவின் விமர்சனங்களுக்கு தேஜஸ்வி யாதவ் இன்று (10-04-24) தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பா.ஜ.கவில் உள்ளவர்கள் அறிவுத்திறனை சோதனை செய்வதற்காகவே இந்த வீடியோவை நாங்கள் பதிவு செய்தேன். அந்த வீடியோவை நான் நேற்று பகிர்ந்திருந்தாலும், அது நவராத்திரிக்கு முந்தைய நாளான கடந்த 8ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பதை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதை கவனிக்காமல் எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. நாங்கள் நினைத்ததை சரி என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.