Aadi Thabasu festival

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைவமா, வைணவமா யார் பெரியவர் என்ற பிரச்சனை வந்ததாகவும், அதனை தடுத்தாட்கொள்ள ஆதிசிவனாகிய சிவபெருமான் தன் உடம்பில் ஒருபாதியை சங்கரனாகவும், மறுபாதி நாராயணராகவும் ஒரு சேரக் காட்சியளித்து, சைவமும், வைணவமும் ஒன்று என்று பக்தர்களை அமைதிப்படுத்தினார் என்றும் நம்பப்படுகிறது.

Advertisment

அந்த அற்புதமான அரிய காட்சியை தனக்குக் காட்டியருள வேண்டும் என்று புன்னைவனத்தில் தவமிருந்த உமா தேவியரான பார்வதியம்மைக்குச் சிவபெருமான் காட்சியளித்தார். ஆடிமாத பௌர்ணமியுடன் கூடிய உத்திராட நட்சத்திரத்தில் சர்வேஸ்வரனின் இந்தக்காட்சி நடைபெற்றதால் ஆடித்தபசு என்றும் மங்காத சிறப்பானது.

Advertisment

இந்த அற்புத திருக்காட்சி புன்னையடி என அழைக்கப்படும் சங்கரன்கோவிலில் நடந்தாக நம்பப்படுகிறது. அதற்காக சங்கரநாராயணராக ஒரு சேர உருவெடுத்த சிவபெருமான் சங்கரநாராயணராகவும், பசுக்களுடன் தவமிருந்ததால் கோமதியம்பிகையாகி, சுவாமி சங்கரநாராயனர் கோவில் என பெரிய ஆலயமாக உருவெடுத்திருக்கிறது.

ஆண்டாண்டு காலம் ஆடி மாதம் 12ம் நாள் திருவிழாவாக நடக்கிற ஆடித்தபசு நிகழ்ச்சியின் பொருட்டு ஒவ்வொரு நாளும் அன்னை கோமதியம்பாள் தவக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழா நிகழ்ச்சியின் சிகரமாக ஆக. 10 அன்று அபிஷேக தீபாராதனைக்குப் பின்பு கோமதியம்பாள் தங்கச் சப்பரத்தில் பகல் 12.15 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 4.30 மணியளவில் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு ரதவீதி எழுந்தருளினார். மாலை 6.30 மணியளவில் தபசு மண்டபத்தில் தவமிருக்கும் அன்னை கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. மிகச் சிறப்பாக நடந்த ஆதிசிவனின் இந்த அற்புதமான அரியகாட்சியை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி சிரத்தையோடு தரிசித்தனர்.

கொரோனாத் தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்த ஆடித்தபசு காட்சித் திருவிழா இந்த வருடம் வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்களின் ஆரவாரத்தோடு நடந்தது மிகச் சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது.