
கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ்பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் சத்திய தருமச்சாலை,சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 154வது ஜோதி தரிசன விழா இன்று (11.02.2025) காலை 06:00 மணிக்கு வள்ளலாரின் சத்திய ஞான சபையில் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனத்தை தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ம் தேதி காலை 05.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். தைப்பூசம் நடைபெறும் சத்திய ஞான சபைக்கு வருவதற்கு முன் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகளை காவல்துறையினர் மாற்று வழியில் அனுப்புகின்றனர். இதனால் கோவிலுக்கு உள்ளே வருவதற்குப் பொதுமக்கள் பக்தர்கள் சரியான வாகன ஏற்பாடு இல்லாமல் சிரமம் அடைந்தனர். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து 13ஆம் தேதி வியாழக்கிழமை 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறும். தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல இந்து அறநிலை துறையினர் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருந்தனர்.