கத்தார் நாட்டில் இருசக்கர வாகனத்தில் படுவேகத்தில் சென்று சாகசம் செய்த இளைஞரின் வாகனத்தை அந்நாட்டு அரசு சுக்குநூறாக நொறுக்கிய சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, கத்தார் நாட்டில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணித்து சாகசம் செய்துள்ளார். மேலும், அவர் சாகசம் செய்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதை அடுத்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். ஏனென்றால், கத்தார் நாட்டில் பொது சாலைகளில் முன் அனுமதியின்றி சாகசம் செய்வது என்பது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அந்த வகையில், இளைஞரின் சாகச வீடியோவின் அடிப்படையில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பைக் ஓட்டுநரான இளைஞரை கைது செய்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சட்ட நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், இளைஞரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் அரவை இயந்திரத்தில் போட்டு சுக்குநூறாக நொறுக்கியுள்ளனர். இது குறித்து, உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், அந்த வீடியோவை பகிர்ந்து, இது போன்ற அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி (17.9.2023) சென்ற போது பைக்கில் சாகசம் செய்து, விபத்தில் சிக்கி அவரை கைது செய்த வழக்கில், அவருடைய பைக்கை எரித்துவிட வேண்டும் என்று நீதிபதி சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.