Skip to main content

வாக்னர் குழுத் தலைவர் தலைமறைவு; அதிபர் புதின் சொல்வது என்ன?

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Wagner group leader absconds; What does President Putin say?

 

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக எந்த புரட்சியும் செய்ய முடியவில்லை என்று ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் ஆயுதக் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனியார் படையின் கிளர்ச்சி குறித்த விசாரணையை ரத்து செய்வதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இன்று வரை போர் நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி  முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த போரில் ரஷ்யா சார்பில் ரஷ்ய ராணுவத்தினருடன் இணைந்து வாக்னர் குழுவினர் என்ற பெயரில் ஆயுதக்குழு ஒன்று உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வந்தது. இந்தக் குழு ரஷ்ய அதிபர் புதினின் நண்பர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த போரில் ஈடுபட்ட போது ரஷ்ய ராணுவம் தங்களுடைய வீரர்களை கொன்றதாக குற்றம் சாட்டி ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியை வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் அறிவித்தார்.

 

அதன் பின் ரஷ்ய அதிபர் புதின், கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை தேசத்துரோகி எனவும் ஆயுதக் குழுவினரை கண்டதும் சுட வேண்டும் எனவும் அந்த நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதனால், ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், வாக்னர் குழு ரஷ்யாவை கைப்பற்ற 200 கி.மீ. தொலைவில் உள்ள மாஸ்கோ தலைநகரை நோக்கி படையெடுத்தனர். மாஸ்கோவை நோக்கி வாக்னர் ஆயுதக்குழு முன்னேறுவதைத் தடுக்க ரஷ்ய ராணுவம் சார்பில் பாலங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கெஸ்கோ, வாக்னர் ஆயுதக்குழுவின் தலைவர் பிரிகோஜின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தார்.

 

இந்த நிலையில், யெவ்ஜெனி ப்ரிகோஜின் அண்டை நாடான பெலாரசுக்கு சென்று தலைமறைவாகி விட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த நாட்டிற்கு சென்றதை யெவ்ஜெனி ப்ரிகோஜினோ, பெலாரசு அதிகாரிகளோ யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த விவகாரம் பெரிய விவாதப் பொருளாக மாறிய பிறகு சுயேச்சையான பெலாரஸ் ராணுவ கண்காணிப்பு பெலாரஸ்கி ஹாஜூன் என்ற அமைப்பு, யெவ்ஜெனி ப்ரிகோஜின் தனி ஜெட் விமானம் மூலம் பெலாரஸ் தலைநகரமான மின்ஸ்க் என்ற இடத்திற்கு நேற்று காலை வந்திறங்கியதாக தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், ப்ரிகோஜின் நேற்று முன்தினம் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில், கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயல் நியாயமான செயல் என்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக புரட்சி செய்ய முடியவில்லை என்றும் கூறினார். அந்த ஆடியோ வெளிவந்து பரபரப்பான சூழ்நிலையில் அன்று இரவு ரஷ்ய அதிபர் புதின் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பேசினார்.

 

அதில் அவர், வாக்னர் குழுவையோ, ப்ரிகோஜின் பெயரையோ குறிப்பிடாமல், “ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் உக்ரைனுக்கு கைப்பாவையாக செயல்பட்டனர். அதே நேரத்தில் எந்தவித ரத்த சேதமும் ஏற்படாமல் கிளர்ச்சி செய்த தனியார் படை வீரர்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார். இந்நிலையில் தனியார் படையின் கிளர்ச்சி குறித்த விசாரணையை ரத்து செய்வதாக அந்த நாட்டின் அதிகாரிகள் அறிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.