Skip to main content

தொடரும் போர் பதற்றம்: ரஷ்யாவிடம் பணியும் உக்ரைன்?

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

russia

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. அமெரிக்கா தனது படைகளையும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது.

 

இந்தநிலையில் ரஷ்யா, உக்ரைனுக்கும் தங்கள் நாட்டிற்கும் அருகில் உள்ள பெலாரஸ் நாட்டில் போர்ப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது.  இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டுக் குடிமக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா இந்த வாரத்திற்குள் படையெடுப்பைத் தொடங்கலாம் எனவும் எச்சரித்துள்ளது.

 

இந்தச்சூழலில் உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்பப்பெற ரஷ்யா விதித்த நிபந்தனைகளில் ஒன்றான நோட்டோ கூட்டமைப்பில் சேரக்கூடாது என்ற நிபந்தனையைப் போரைத் தவிர்க்கும் பொருட்டு தனது நாடு ஏற்க வாய்ப்பிருப்பதாக எனப் பிரிட்டனுக்கான உக்ரைன் தூதர் வாடிம் பிரிஸ்டைகோ தெரிவித்துள்ளார். இதற்கிடையே 48 மணிநேரத்திற்குள்ளாக ஒரு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு ஐரோப்பிய பாதுகாப்புக் குழுவின் முக்கிய நாடுகளின் உறுப்பினர்களை அழைக்கவும் உக்ரைன் முடிவு செய்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்