Skip to main content

ஆப்கான் நாட்டில் உக்ரைன் விமானம் கடத்தல்? 

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

ukraine minister

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அமைச்சர்களை தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

 

குல் ஆகா என்பவர் நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். சதர் இப்ராஹிம், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நஜிபுல்லா உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் மீட்புப்பணிகளுக்காக சென்ற விமானம் கடத்தப்பட்டதாக அந்தநாட்டு அமைச்சர் கூறியதாக தகவல் வெளியானது.

 

உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் யெவ்ஜெனி யெனின், "கடந்த ஞாயிற்றுக்கிழமை, எங்கள் விமானம் கடத்தப்பட்டது. உக்ரைன் நாட்டு மக்களை மீட்பதற்கு பதிலாக, அந்த விமானம் அடையாளம் தெரியாத பயணிகளோடு ஈரானுக்குச் சென்றுள்ளது. உக்ரைன் மக்களால் விமான நிலையத்திற்கு வரமுடியாததால், எங்களது அடுத்த மூன்று மீட்பு முயற்சிகள் வெற்றியடையவில்லை" என தெரிவித்ததாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஆனால் அதே நேரத்தில், உக்ரேனிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், உக்ரைன் விமானங்கள் எங்கும் சிறைபிடிக்கப்படவில்லை என்றும், சிறைபிடிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை என்றும் தெரிவித்ததாக உக்ரைன் செய்தி நிறுவனமான ஆர்பிசி கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Afghanistan has advised that the CAA should be implemented on a non-religious basis

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 11 ஆம் தேதி அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார்.  

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மதவேறுபாடு இன்றி அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  தாலிபான் அரசின்(ஆப்கானிஸ்தான் அரசு) அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன், “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் புதிதாக அமல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.