trump moves to Mar-a-Lago residence

அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட குழப்பங்களுக்கும் களேபரங்களுக்கும் பிறகு அந்நாட்டில் 46 ஆவது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றுள்ளனர். தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது தரப்பினர், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்துவது, நாடாளுமன்ற வளாகத்தில் கலவரத்தில் ஈடுபடுவது என அனைத்துவகையான குளறுபடிகளையும் ஏற்படுத்தினர். இவை அனைத்தையும் கடந்து அதிபராகப் பதவியேற்றுள்ளார் பைடன்.

Advertisment

இந்தச் சூழலில், பதவியிலிருந்து விலகிய முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஓய்வெடுப்பதற்காக தனது 160 மில்லியன் மதிப்புள்ள சொகுசு பங்களாவில் குடியேறியுள்ளார். 20 ஏக்கர் பரப்பளவில், அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகளை பால்கனியில் இருந்து கண்டு ரசிக்கும் வகையில் புளோரிடா கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது இந்த பங்களா.

Advertisment

1985 ஆம் ஆண்டில் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த மாளிகையை வாங்கிய ட்ரம்ப், இதனை ஒரு தனியார் கிளப்பாக மாற்றினார். 128 அறைகளைக் கொண்டு மூரிஷ்-மத்திய தரைக்கடல் கட்டடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த பங்களாவின் ஒரு தனிப்பட்ட பகுதியைத் தனது இல்லமாக மாற்றினார் ட்ரம்ப். அவர் நான்கு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்தபோது, அவரது ‘குளிர்கால இல்லமாக’ இருந்தது இந்த பங்களாதான்.

20 ஏக்கர் பரப்பளவில் 128 அறைகள் கொண்ட விடுதி, 22,000 சதுர அடி பரப்பளவிலான மிகப்பெரிய நடன அரங்கம், ஐந்து களிமண் டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் நீச்சல்குளம் போன்ற ஏராளமான வசதிகளைக் கொண்டுள்ள இந்த பங்களாதான் புளோரிடாவில் இரண்டாவது மிகப்பெரிய பங்களா ஆகும். 2024 தேர்தலில் போட்டியிடும் திட்டத்தோடு உள்ள ட்ரம்ப், இந்த இல்லத்திலிருந்தே இன்னும் சில காலம் செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது. ஓய்வுக்காகவும், அதன் பின்னதான தனது அரசியல் பயணத்திற்காகத் திட்டமிடும் வகையிலும் ட்ரம்ப் இந்த பங்களாவிற்குக் குடிபெயர்ந்திருந்தாலும், ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது தனியுரிமைகள் ட்ரம்ப் வருகையால் பாதிக்கப்படக்கூடும் எனக்கூறி அவரது குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், ட்ரம்ப் குடியேறியிருப்பது கிளப் பகுதி என்பதால், 1993 ஆம் ஆண்டு பாம் பீச் ஸ்டேட்ஸ் கிளப்புடனான அரசு ஒப்பந்தத்தின்படி, இப்பகுதியில் உள்ள கிளப்களில், ஒருவர் வருடத்திற்கு 21 நாட்களுக்கு மேல் தங்கமுடியாது.அதேபோல, தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பது விதிமுறை. அதனால், இந்த கிளப்பை ட்ரம்ப், அவரது நிரந்தர வீடாக மாற்றினால்சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.