ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் பின்னர் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இருநாட்டு தலைவர்கள் பரஸ்பரம் கடுமையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

trump about soleimani incident

Advertisment

Advertisment

இந்த சூழலில் சுலைமான் கொல்லப்பட்டபோது என்ன நடந்தது என்பது குறித்து ட்ரம்ப் தனது ஆதரவாளர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ட்ரம்ப், அதற்காக நிதி வசூலிக்கும் நிகழ்ச்சி ஒன்றை புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள அவரது கேளிக்கை விடுதியில் நடத்தினார். இதில் சுலைமான் கொல்லப்பட்டபோது என்ன நடந்தது என்பதை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், "அமெரிக்கா குறித்து சுலைமானி மிகவும் மோசமாக, சகித்துக் கொள்ள முடியாத அளவு விமர்சனம் செய்து வந்தார். அவர் ஒரு தீவிரவாதி. நமது எதிரிகளின் பட்டியலில் அவர் இருந்தார். எனவே அவரை அழிக்க முடிவெடுத்து, அவர் மீது ஆளில்லா விமான தாக்குதலை நடத்தினோம். அப்போது அமெரிக்க ராணுவ அதிகாரிகள் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். ஒவ்வொரு விநாடியும் கள நிலவரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. 'சுலைமான் மற்றும் அவருடன் இருப்பவர்களின் கடைசி நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் 10, 9, 8...' என்று அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீரென 'பூம்' என்ற சத்தம் கேட்டது. பின்னர் ‘அவர்கள் அழிந்து விட்டனர்' என்று கூறி அதிகாரிகள் தொடர்பை துண்டித்தனர்" என தெரிவித்துள்ளார்.