ஒமிக்ரான் வகை கரோனா 23 நாடுகளுக்குப் பரவியிருக்கும் நிலையில், பயணத் தடை விதிப்பதால் எந்தப் பயனும் இல்லை என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், போட்ஸ்வானா, பிரேசில், கனடா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நைஜீரியா, நார்வே, போர்ச்சுகல், சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் என ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 23 நாடுகளில் பரவியிருக்கிறது.
இதனால் இந்நாடுகளுக்கு விமான சேவை மேற்கொள்ள அமெரிக்கா, ஜப்பான் உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகள் பயணத் தடை விதித்துள்ளன. வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச நாடுகளுக்கான விமானப் போக்குவரத்தைத் தொடங்கவிருந்த இந்தியாவும், அந்த முடிவை ஒத்திவைத்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் அனைவருக்கும் ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. மேலும், தனது நாட்டு மக்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தவும் ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், பயணத் தடை விதிப்பது நியாயமற்றது என்றும், இதனால் பலன் ஏற்படாது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த 23 நாடுகளைத் தவிர மேலும் பல்வேறு நாடுகளுக்கு ஒமிக்ரான் பரவ வாய்ப்பிருப்பதாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.