இலங்கையின் 7 ஆவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற நிலையில், இலங்கையின் பல பொது இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் உள்ள தமிழ் மொழி அழிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே, தன்னுடன் சேர்ந்து தமிழர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறினாலும், தமிழர்கள் மத்தியில் பதட்டமான சூழலே நிலவி வருகிறது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் உட்பட 22 மாவட்டங்களில் ராணுவத்தினர் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டத்தை அமல்படுத்தினார் கோத்தபய ராஜபக்சே. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் உள்ள தமிழ் மொழி அழிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
"தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலத்தில் பெரும்பான்மையின் தீண்ட தகாத முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது" என கூறியுள்ள இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழி மட்டும் அழிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் சில பகுதிகளில் தமிழர்கள் அச்சத்தில் இருப்பதாக சிலர் கூறிவரும் நிலையில், பொது இடங்களில் இருந்த பெயர் பலகைகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது சர்ச்சையாகியுள்ளது.