Sri Lankan President says they will not allow Indian fishermen to come to fish illegally

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், ரணில் விக்ரம சிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரா குமார திஸநாயக, இலங்கையின் கடைசிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக, வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, இலங்கையின் 9வது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார்.

Advertisment

இதனையடுத்து, இலங்கையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் அநுரா குமார திஸநாயக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சிங்களவர்களையும் தமிழர்களையும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும் கடந்தகால அரசியல்வாதிகளை போல் நான் இருக்க மாட்டேன். 30 வருட கால யுத்தத்தால், கண்ணீர், குழந்தைகளின் இழப்பு, அன்புக்குரியவர்களின் இழப்பை தவிர இந்த நாடு வேறு எதையும் கண்டதில்லை. இது போன்ற ஒரு போர் இனியும் ஏற்படாது என்பதை உறுதி செய்வோம். நாங்கள் பல்வேறு சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவோம். இது உங்கள் அரசாங்கம் என்று நீங்கள் உணரும் வரை கடினமாக உழைப்போம்.

Advertisment

எனது அரசாங்கம் விவசாயிகள் மற்றும் மீனவ மக்களுக்கு ஆதரவளிக்கும். அதே நேரத்தில் நமது கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வரும் இந்திய மீனவர்களை அனுமதிக்க மாட்டோம். இந்த நடைமுறையானது நமது கடல் சுற்றுச்சூழல் அமைப்பை கடுமையாக பாதித்து, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்குப் பகுதியில் உள்ள கடல் வளங்களை இந்திய மீனவர்கள் அழித்து வருகின்றனர். இதுபோன்ற கடல் வளங்களைச் சுரண்டுவது நடக்காமல் இருப்பதையும், இலங்கை மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் எனது அரசாங்கம் உறுதி செய்யும்.

இலங்கை அரசாங்கத்தினால் குறிப்பாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலங்களை உரியவர்களிடம் படிப்படியாக அவர்களிடமே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். தமிழர்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக பாதுகாப்புத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

Advertisment