
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். இந்த திட்டத்தின் படி ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சுமார் 9 மாதங்களாக இருவரும் விண்வெளியில் தங்கினர். கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் அளிக்காமல் போனது. இதன் காரணமாக, விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை அழைத்து வர எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது.
அதன்படி 15-03-25 அதிகாலை 4.33 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலத்தில் நாசாவின் விண்வெளி வீரர்கள் நான்கு பேர் சர்வதேச விமான விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள விண்வெளி மையத்தை சுமார் 6 மணி நேரத்தில் டிராகன் - ‘க்ரூ’ விண்கலம் அடைந்திருந்தது. விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கும் பணியான டாக்கிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 9:37 மணிக்கு வெற்றிகரமாக முடிந்தது. வரும் 19ஆம் தேதி ஃப்ளோரிடாவில் நிலவும் வானிலை மாற்றங்களை பொறுத்து விண்கலமானது தரையிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி 10:35 மணிக்கு விண்வெளி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அன்ட் டாக் செயப்பட்டு பிரிந்து தற்பொழுது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3:27 மணிக்கு விண்வெளி வீரர்கள் பயணிக்கும் இந்த விண்கலம் பூமியை அடைய உள்ளது. இப்பயணம் எப்படி இருக்கப் போகிறது; இதில் ஏற்படும் சவால்கள் என்னென்ன என உலகமே உற்று நோக்கி வருகிறது.