சிங்கப்பூரில் உள்ள சவுத் டவுன் என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. 194 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலானது மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் தலைமை பூசாரியாகப் பணியாற்றி வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ கந்தசாமி சேனாபதி. இவர் 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் இந்த கோவிலில் அர்ச்சகர் பணியை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பிலான நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இவர் பொறுப்பில் இருந்து வந்துள்ளன. அப்போது அவர் கோவில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வந்துள்ளார். மேலும் இது தொடர்பாக பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது நடந்த ஆய்வில் அர்ச்சகர் கந்தசாமி முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து பூசாரி கந்தசாமியின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கந்தசாமி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது பூசாரி முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கந்தசாமிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.