/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n350.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்துள்ளது செல்லரபட்டி ஊராட்சி. இப்பகுதியில் வசித்து வந்த விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்ததில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கந்திலி காவல்துறையினர் அப்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண்ணின் காலில் அணிந்திருந்த காலணியைத் தடயமாக வைத்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் அவர் செல்லரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் அமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று தெரியவந்தது. அரசு தேர்வுகளுக்கு முயன்று வந்த அமலா அதற்கான பயிற்சி வகுப்புகளுக்காக சென்று வந்த நிலையில், கடந்த ஜூன் 22ஆம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். அமலா ஏற்கனவே ஒரு இளைஞரை காதலித்து வந்ததால் அவருடன் சென்றிருக்கலாம் என நினைத்த பெற்றோர்கள் தேடாமல் இருந்துள்ளனர். ஆனால் 23ஆம் தேதி அன்று அவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது தெரிய வந்ததும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n351.jpg)
இந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அமலாவின் செல்போனை வேறு ஒரு நபர் உபயோகித்து வந்ததை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்லரப்பட்டி சேர்ந்த மகேந்திரனை பிடித்து போலீசார் விசாரித்ததில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. அமலாவின் வீடும் மகேந்திரனின் வீடும் அருகருகே உள்ள நிலையில், அமலாவிற்கும் மகேந்திரனுக்கும் சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் மகேந்திரன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதால் தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு வருடங்களாக மகேந்திரன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு திருப்பத்தூர் வந்த மகேந்திரன் டெலிவரி பாய் வேலைக்கு சேர்ந்துள்ளான். ஆனாலும் அமலாவை ஒருதலையாகக் காதலித்து வந்த மகேந்திரனுக்கு, அமலா வேறு ஒரு நபரை காதலித்து வந்த செய்தி தெரிய வந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த அன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த அமலாவை மகேந்திரன் வழி மறித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அமலா மகேந்திரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகேந்திரன், கொலை செய்து கை கால்களைத் துப்பட்டாவில் கட்டி கிணற்றில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)