Skip to main content

தஞ்சமடைய இடம் தேடும் ஷேக் ஹசீனா?-கலவரக் காடாகும் வாங்க தேசம்

Published on 05/08/2024 | Edited on 05/08/2024
Is Sheikh Hasina looking for refuge?

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் போராட்டக்காரர்கள் கோனோ பாபனின் கதவுகளைத் திறந்து இன்று (05.08.2024) பிற்பகல் 03:00 மணியளவில் பிரதமரின் இல்லத்தின் வளாகத்திற்குள் நுழைந்ததாக வங்க தேசத்தின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று மதியம் 02:30 மணியளவில் பங்கபாபனில் இருந்து இராணுவ ஹெலிகாப்டரில் அவரது சகோதரியுடன் தப்பிப்பததாக தகவல் வெளியானது. இந்த பரபரப்பான சூழலில் வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எந்த நாட்டில் தஞ்சமடைய இருக்கிறார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்தியாவின் டெல்லி அல்லது இங்கிலாந்தில் லண்டன் பகுதியில் அவர் தஞ்சமடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பின்லாந்து நாட்டிலும் தஞ்சமடைய வாய்ப்பு இருப்பதாக 'தி டான்' என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Is Sheikh Hasina looking for refuge?

வங்கதேசத்தில் பரவும் கலவரம் காரணமாக இந்திய எல்லையில் கண்காணிப்பு பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஷேக் ஹசீனா தப்பித்த AJAX01431 என்ற எண் கொண்ட ஹெலிகாப்டர் உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி வான் பறப்பில் பறந்து வருவதாக ரேடாரில் பதிவாகியுள்ளது. அதேநேரம் வங்கதேசத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு உருவாகும் என அந்நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். தற்பொழுது வாங்கதேசத்து பிரதமர் இல்லம் பகுதியிலும், நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரக்காரர்களால் முஜிபுர் ரஹ்மான் சிலை சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்