Skip to main content

பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளை இலவசமாக்கிய உலகின் முதல் நாடு...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

scotland passes the Period Products Bill

 

 

பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து சுகாதார தயாரிப்புகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை ஸ்காட்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

நாடு முழுவதும் உள்ள பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களுக்குத் தேவையான மாதவிடாய்க்கால தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் மசோதாவை ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினரான மோனிகா லெனான் முன்மொழிந்தார். பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டாம்பொன் போன்ற தயாரிப்புகளை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இலவசமாக வழங்க வழிவகை செய்யும் இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ஒருமனதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளை முற்றிலும் இலவசமாக்கிய உலகின் முதல் நாடு என்ற பெயரை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது. 

 

இந்த மசோதாவின் வெற்றி குறித்துப் பேசிய ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லெனான், "தேவைப்படும் அனைவருக்கும் சுகாதார தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து இருக்கும். மாதவிடாயை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இந்த திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்காட்லாந்து கேப்டன் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி வீரர்கள்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

india scotland

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் நேற்று (05.11.2021) நல்ல ரன் ரேட்டுடன் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய இந்திய அணி, ஸ்காட்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி வெற்றிபெற்றது.

 

இதற்கிடையே, போட்டியின்போது ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கைல் கோட்சர், இந்திய அணி வீரர்கள் எங்களது ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார். "அவர்கள் விளையாட்டின் சிறந்த தூதர்கள். கோலியாக இருந்தாலும், வில்லியம்சனாக இருந்தாலும், ரஷீத் கானாக இருந்தாலும், அவர்களுடன் எங்கள் வீரர்கள் பேச வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஒரே மற்றும் சிறந்த வழி அதுதான்" எனவும் கைல் கோட்சர் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு விராட் கோலி, ரோகித் ஷர்மா, அஷ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள், ஸ்காட்லாந்து அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அந்த அணி வீரர்களுடன் உரையாடினர். இதுதொடர்பான படங்களை வெளியிட்டுள்ள ஸ்காட்லாந்து அணி, தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக விராட் கோலி மற்றும் சக இந்திய வீரர்களுக்குப் பெரும் மரியாதையை செலுத்துவதாக கூறியுள்ளது.

 

 

Next Story

ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல் 

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

ramadoss


ஸ்காட்லாந்தில் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களையும் மீட்டு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


ஐரோப்பாவின் ஸ்காட்லாந்து நாட்டில் சொகுசுக் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 48 இந்தியர்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தங்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.


ஸ்காட்லாந்துக்கும் லண்டனுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் சொகுசுக் கப்பல் சேவையை ஓல்சன் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு  சொந்தமான பால்மோரல் என்ற சொகுசுக் கப்பல் கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்காட்லாந்துக்கு சென்று திரும்பும் போது, கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கப்பல் ஸ்காட்லாந்து நாட்டு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடக்கத்தில் பயணிகள், கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட எவரும் வெளியேற அனுமதிக்கப்படாமல் சொகுசு கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.


கரோனா ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்ட நிலையில் சொகுசுக் கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கப்பலில் பணியாற்றி வந்த தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்கப்பட்டு தாயகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், கப்பல் முடக்கப்பட்டு  3 மாதங்களாகியும் இன்று வரை அந்தக் கப்பலில் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த 48 ஊழியர்களும் மீட்கப்படவில்லை. அவர்களில் 5 பேர் தமிழர்கள். அவர்கள் கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, வேலூர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தங்களுடன் பணியாற்றிய அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பி விட்ட நிலையில், அவர்கள் மட்டும் இன்னும் கப்பலிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.
 


கப்பலில் சிக்கித் தவிக்கும் 48 பேரும் தங்களின் மாநில அரசுகள் மூலமாக தாயகம் திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர். தங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கும், இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். எனினும், இந்திய அரசிடம் இருந்தோ, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில அரசுகளிடமிருந்தோ இதுவரை எந்தத் தகவலும் அவர்களுக்கு கிடைக்காததால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 5 பேர் உட்பட 48 பேரும் 3 மாதங்களுக்கும் மேலாக கப்பலில் இருந்தாலும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கப்பல் நிறுவனம் பார்த்துக் கொள்கிறது. அதனால் அவர்களுக்குச் சிக்கல் இல்லை என்றாலும் கூட, இங்கிலாந்து நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தங்களுக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிக் கொள்ளுமோ என்று அஞ்சுகின்றனர். அவர்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது.
 

http://onelink.to/nknapp


உலகின் எந்த நாடுகளில் இந்தியர்கள் சிக்கித் தவித்தாலும் அவர்களை மீட்டு வர வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். கப்பலில் தவிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, இன்னும் பல நூறு பேர் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் முடங்கியுள்ளனர். லண்டனில் இருந்து ஒரே ஒரு விமானத்தை இயக்கினாலே அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர முடியும்.

எனவே, வந்தே பாரத் இயக்கத்தின் மூலம் லண்டனுக்குச் சிறப்பு விமானத்தை இயக்கி, ஸ்காட்லாந்தில் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களையும் மீட்டு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.