சவுதி அரேபியாவின் குடிமக்கள் மட்டுமின்றி அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசமாகக் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து அங்குத் தங்கி பணிபுரிபவர்களே ஆவர். இந்தச் சூழலில், கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியாமல், அந்நாட்டில் லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பலருக்கும், கரோனா தடுப்பூசி கிடைப்பது கடினமான காரியமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்தக் கவலையைப் போக்கும் விதமாக, தங்களது நாட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என சவுதி அறிவித்துள்ளது.
அதேபோல, ஏற்கனவே கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள், தடுப்பூசிகள் நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்குக் கிடைக்கும் என்று சவுதி சுகாதார அமைச்சகம் கணித்துள்ளது. அந்நாட்டு அரசின் இந்த அறிவிப்பு மூலம் அங்கு வசிக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குக் கரோனா தடுப்பூசி இலவசமாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.