Skip to main content

முன்னாள் கணவனை திட்டிய பெண்ணுக்கு சிறை தண்டனை!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முன்னாள் கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த நபர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது கணவனை விவாகரத்து செய்துள்ளார். தற்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால், அவரைத் திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது.

 

 

 Woman jailed for defaming ex-husband

 

 

 

இந்த வழக்கை விசாரித்த ஜெட்டா குற்றவியல் நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு 3 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. உலகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளை ஒப்பிடுகையில், சவுதி அரேபியாவில் பெண்களுக்கான உரிமைகள் என்பது மிகவும் குறைவு. வாகனம் ஓட்டவும், விளையாட்டு மைதானங்களுக்கு சென்று போட்டிகளை காணவும் சமீபத்தில் தான் சவூதி அரேபியா மன்னர் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மழை பாதிப்பு; உதவிக்கு வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
WhatsApp number to report rain damage; Tamil Nadu Government Notification

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

இந்த நிலையில், மழை பாதிப்பை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் 8148539914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மழை பாதிப்பு, உதவி தேவைகளை மக்கள் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் @tn_rescuerelief என்ற எக்ஸ் தள பக்கத்திலும் தங்களது குறைகளை தெரியப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.