Skip to main content

புதிய சர்ச்சையில் கனடா; பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

 Prime Minister Justin Trudeau issued a public apology for new controversy

 

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கனடாவிற்கு சென்றார். அங்கு சென்ற உக்ரைன் அதிபருக்கு, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதே போல், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு ஆதரவாக நாஜிப் படையில் ராணுவ வீரராக இருந்த யரோஸ்லாவ் ஹூன்காவுக்கும் (98) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர் தற்போது உக்ரைனில் இருக்கிறார் என்பதும், முதலாவது உக்ரைன் பிரிவு சார்பாக போர் புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

கனடா நாடாளுமன்ற கீழவையில் உக்ரைன் அதிபர் கலந்து கொண்டு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, அவை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த  யரோஸ்லாவ் ஹூன்காவை, நாடாளுமன்ற கீழவைத் தலைவர் அந்தோனி ரோட்டா கெளரவப்படுத்தினார். மேலும், அவர் ஹூன்காவை, ‘போர் நாயகன்’ எனக் குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார். அதுமட்டுமல்லாமல், அவரை கெளரவிக்கும் விதமாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி தலைவணங்கி மரியாதை செலுத்தினர்.

 

கனடா நாடாளுமன்றத்தில் நாஜிப் படையை சேர்ந்த வீரருக்கு பிரதமர் ட்ரூடோ உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவர் மத்தியிலும் கடும் கண்டனங்கள் குவிந்து வந்தன. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற கீழவைத் தலைவர் அந்தோனி ரோட்டாவை ராஜினாமா செய்யும்படி பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அந்தோனி ரோட்டாவை ராஜினாமா செய்ய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவுறுத்தினார். இதையடுத்து, தனது பதவியை அந்தோனி ரோட்டா கடந்த 26ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக மெளனம் காத்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் நாஜி படை வீரரை கெளரவப்படுத்தியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜஸ்டீன் ட்ரூடோ, “ஒருவரின் பின்னணி குறித்துத் தெரிந்து கொள்ளாமல் அவரை கெளரவித்தது மிகப்பெரிய தவறு. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாஜி படையில் இருந்த வீரருக்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்பது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாஜி ஆட்சியின் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. நாடாளுமன்றத்தில் நடந்த தவறுக்காக அனைவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”  என்று தெரிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்