கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பு ஊசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் மீண்டும் ஒரு வித மர்ம காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
சீனாவில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. கடந்த 12ஆம் தேதி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், ‘சீனாவில் வாழும் அதிகப்படியான மக்களிடம் சுவாச பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்கு காரணம்’ என்று தெரிவித்தனர்.
குழந்தைகளிடையே பரவும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமோட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவுவதற்கு முன்பு இந்த அமைப்பு புது நோய் பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த காய்ச்சல் மற்ற நாடுகளுக்கு பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சீனாவில் பரவி வரும் காய்ச்சல் இந்தியாவை தாக்குமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் பரவி வரும் இந்த காய்ச்சல் பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது கொரோனாவை போல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு தான். இந்தியாவில், இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த காய்ச்சல் பரவினால் அதை எதிர்கொள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும் அது எந்தவகை காய்ச்சல் என்பது குறித்து மருத்துவர்களும், மருத்துவமனைகளும் ஆய்வு செய்ய வேண்டும்.