Skip to main content

24 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்; சிக்கலில் துருக்கி அதிபர் 

 

Over 24 thousand casualties; Turkish president in trouble

 

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 

துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. துருக்கி அதிபர் எர்டகோன் ஒவ்வொரு நாளும் வேறு வேறு மாகாணங்களுக்குச் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

 

மீட்புப் பணிகள் அனைத்து பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்ட நிலையில் சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் துருக்கிக்கும் சிரியாவிற்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்றும் மக்களை உயிருடனும் சடலமாகவும் மீட்ட வண்ணம் உள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்கள் கடக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதும் காஸியெண்டெப் மாகாணத்தில் 94 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கி இருந்த 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். அதுபோல் பலரும் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியமைப்புகளும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், போயிங் போன்ற நிறுவனங்களும் நிதியுதவிகளை அறிவித்து உதவி வருகிறது.

 

இரு நாடுகளிலும் தற்போது வரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில், துருக்கியில் வரும் மே மாதம் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எர்டகோன் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் துருக்கியில் இந்நிலை தொடர்வதால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. பேரிடர் சூழலால் தேர்தலை ஒத்திவைக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !