மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.
அதன்படி, விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இரண்டு நபருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று (07.10.2024) அறிவிக்கப்பட்டது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்குப் பிறகு மைக்ரோ ஆர்.என்.ஏ. என்ற செல்லின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்ட ள்ளது. குறிப்பாக, மைக்ரோ ஆர்.என்.ஏ. என்ற செல், மனித உடல் வளர்ச்சியில் எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும், மனிதனின் இயல்புகளில் அது ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும், அதன் தன்மை என்ன என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அதனை முதன் முதலாகக் கண்டறிந்து கூறியதற்காக இரண்டு நபர்களுக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான (2024) இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று (08.10.2024) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகிகோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.