பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் இம்ரான்கான் வரும் 11-ஆம் தேதி பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் இந்தியாவிலுள்ள பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் போலியானது என பிடிபி கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் கிரிக்கெட் வீரர் கபிலதேவ், சுனில் கவாஸ்கர், அரசியல் பிரபலமான சித்து, பாலிவூட் நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் அந்த விழாவில் இந்திய பிரதமர் மோடியை அழைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற செய்தியும் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவிலுள்ள எந்த கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் அழைக்கப்படவில்லை என பிடிபி கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.