நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளைத் திணறடித்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் காரணமாக, இதுவரை இரண்டு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆரம்பம் முதலே கரோனா வைரஸ் பரவலைத் திறமையாகக் கையாண்ட நியூசிலாந்து நாட்டில், கடந்த மூன்று மாதங்களாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 26 அன்று முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அன்றிலிருந்து தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் அந்நாட்டுப் பிரதமர் ஜெஸிந்தா. மார்ச் 19க்குள் அதன் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு மார்ச் 26 முதல் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அந்நாட்டில் இதுவரை நோய்ப் பாதித்தோருடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்பட்ட அனைவருக்கும் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், NZ COVID Tracer என்ற செயலியின் மூலம் மக்களின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பிறகு 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆக்லாந்து பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆக்லாந்து பகுதியில் உடனடியாக ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.