Skip to main content

தேசியக்கொடியை இறக்கிய காலிஸ்தான்; பதிலடி கொடுத்த இந்தியா

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

National Flag was hoisted again at the Indian Embassy in London

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

 

கடந்த மாதம் பஞ்சாபின் ரூப்கர் மாவட்டம் சாம் கவுர் சாகிப் என்ற பகுதியைச் சேர்த்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக அம்ரித் பால் சிங் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான லவ் ப்ரீத் சிங் என்பவரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து இருந்த போது லவ் ப்ரீத் சிங்கை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அஜினாலா காவல்நிலையத்திற்கு வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்து காவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவலர்கள் லவ் ப்ரீத் சிங்கை விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் லவ் ப்ரீத் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவித்துள்ளனர்.

 

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முயன்ற போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், இதனை எதிர்த்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்திய தேசியக்கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பணியாற்றி வரும் இங்கிலாந்து தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டங்களைத் தெரிவித்தது. மேலும், இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதனையடுத்து லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகப்பெரிய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதே போன்று அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தேசியக்கொடி இறக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் சுஷில் குமார் ரிங்கு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் ஷீத்தல் அங்குரல்

மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.