Skip to main content

செவ்வாய்க் கிரகத்தில் புது வரலாறு எழுதிய நாசா!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

nasa

 

செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகள், தற்போது அக்கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம் ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை (ரோவர்) செவ்வாய்க்கு அனுப்பியது.

 

இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கிரகத்தில் செய்யும் ஆய்வு மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என ஏற்கனவே நாசா தெரிவித்திருந்தது. இந்த விண்ணூர்தி, கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் பயணம் செய்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த ‘பெர்சவரன்ஸ்’ விண்ணூர்தியில், ‘இன்ஜெனுயிட்டி’ என்ற ஹெலிகாப்டரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வினை மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனுயிட்டி ஹெலிகாப்டரை ஏப்ரல் 11 ஆம் தேதி இயக்க முதலில் நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சனையால், திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்தநிலையில் தற்போது செவ்வாய்க் கிரகத்தில், ‘இன்ஜெனுயிட்டி’ ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக விமானம்/ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்பு வேற்றுக்கிரகம் எதிலும் விமானமோ, ஹெலிகாப்டரோ பறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“8 ஆண்டுகளில் நாம் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கியிருப்போம்” - எலான் மஸ்க்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
elon musk about space x attempt 3rd time

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலவிற்கும், செவ்வாய் கோளிற்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஒன்றை உருவாக்கி, அதை செயல்படுத்தும் முயற்சியில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ராக்கெட், 33 என்ஜின்களுடன் 400 அடி உயரத்தில், உலகின் மிகப்பெரிய ராக்கெட் என்ற சிறப்பம்சத்துடன் தயாரானது. 

இந்த ராக்கெட்டின் முதற்கட்ட சோதனை கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நிலையில், ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் ஏவப்பட்ட 4 நிமிடங்களிலே வெடித்துச் சிதறியது. பின்பு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது சோதனை முயற்சி நடத்தப்பட்டது. அப்போது, ராக்கெட்டிலிருந்து விண்கலம் தனியாகப் பிரிந்த பிறகு பூஸ்டர் வெடித்துச் சிதறியது. 

இந்த நிலையில் மூன்றாவது சோதனை முயற்சி, அடுத்த மாதமான பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதும் மூன்றாவது சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க், “இன்றிலிருந்து அடுத்த 8 ஆண்டுகளில் நாம், செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம். நிலவுக்கும் மனிதர்களை அனுப்பியிருப்போம். செவ்வாய்க் கிரகத்தில் வாழ நிறைய வேலைகள் இருக்கிறது. மூன்றாவது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை இந்த ஆண்டு வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார். 

Next Story

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த 4 விண்வெளி வீரர்கள்

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

4 astronauts reach the International Space Station

 

விண்வெளி வீரர்கள் 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்ததாக நாசா அறிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது.

 

இந்தப் பயணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் மொக்பெலியின் தலைமையில் டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மொஜென்சன், ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் ஆகியோர் அடங்கிய 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். மேலும் இவர்கள் ஒரு வருட காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.