Skip to main content

கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோய்... 6 பேர் பலி!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

canada

 

உலகமே கரோனா பாதிப்பால் அவதிப்பட்டுவரும் நிலையில், கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், மூளையைத் தாக்கும் மர்ம நோய் மக்களை அச்சுறுத்திவருகிறது. இதுவரை அந்த மர்ம நோயால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த மர்ம நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை.

 

இந்த மர்ம நோய் தாக்கியவர்களுக்குத் தூக்கமின்மை, நினைவுத்திறன் குறைதல், பிரமை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர்களைப் பார்ப்பது போன்ற பிரமைகளும் இந்த நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படுகிறது. இது கனடா நாட்டு மருத்துவர்களைத் திகைக்கவைத்துள்ளது. அவர்கள் இந்த நோய்க்கான காரணம் தெரியாமல் திணறிவருகின்றனர். இந்த நோய் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 

 

இந்நிலையில், இந்த மர்ம நோய் அச்சமூட்டும் விதமாக இருப்பதாக கனடா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "புதிய மற்றும் அறியப்படாத நோய் அச்சமூட்டுகிறது. நியூ பிரன்சுவிக்கில் வசிப்பவர்கள், நரம்பியல் நோயாக இருக்க வாய்ப்புள்ள இந்த நோய் குறித்து கவலையும் குழப்பமும் அடைந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்” என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கனடாவில் பயங்கரவாதி கொலை சம்பவம்; 3 இந்தியர்கள் அதிரடி கைது!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
3 Indians arrested on Incident case in Canada

கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கடந்த சில காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நாட்டு குடிமகனாக இருந்த நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது.

இந்த நிலையில், பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜார் கொலை சம்பவம் தொடர்பாக மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலை வழக்கின் கீழ் கைதான அவர்களின் புகைப்படங்களையும் கனடா போலீசார் வெளியிட்டுள்ளனர். கைதானவர்கள், கரண் ப்ரார் (22), கமல்ப்ரீத் (22) மற்றும் கரண்ப்ரீத் சிங் (28) ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது. 

இந்தக் கைது நடவடிக்கை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “நிஜார் கொலை, நாட்டில் பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டது. அதைக் கடந்து செல்ல முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது” என்று கூறினார். இதனையடுத்து, கனடா போலீசாரின் இந்த கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “கனடா எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. சில வழக்குகளில் அவர்கள் எங்களிடம் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை. போலீஸ் ஏஜென்சிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. இந்தியாவைக் குறை கூறுவது அவர்களது அரசியல் நிர்ப்பந்தம். கனடாவில் தேர்தல் வருவதால் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஏதோ ஒரு கும்பல் பின்னணியில் இருக்கும் இந்தியர்கள் என்று தெரிகிறது. காவல்துறை சொல்லும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், நான் ஏற்கனவே சொன்னது போல், எங்களுக்கு வருத்தமளிக்கிறது.  அவர்கள் இந்தியாவில் இருந்து, குறிப்பாக பஞ்சாபிலிருந்து, கனடாவில் திட்டமிட்ட குற்றங்களை செயல்பட அனுமதித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.  

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.