Skip to main content

மரம் வெட்ட வந்த 2 பேர் கொலை, 3 பேர் மாயம்; அமேசான் காட்டை பாதுகாக்கும் பழங்குடியினர்

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
'Mashco Piro' tribal struggle in Amazon jungle

தென் அமெரிக்காவின் பெரு பகுதியில் உள்ள அமேசான் காட்டில் 'மாஷ்கோ பைரோ' என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வெளியுலக மக்களுடன் அதிகம் தொடர்பு கொள்வதில்லை. காலம் காலமாக தனிமையாகவே அமேசான் காட்டில் வேட்டையாடி பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், அரசு கடந்த ஜனவரி மாதம் பெரு காடழிப்பு மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இந்த நடவடிக்கையால்  சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் சுரங்கம் எடுப்பது எளிதாக மாறும் என்றும், இது 'வன எதிர்ப்பு சட்டம்' என்றும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், பழங்குடியினர் வாழும் நிலத்தையொட்டி மரம் வெட்டிய 6 பேர் கொண்ட குழுவைப் பழங்குடியினர் தாக்கினர்.  ஆகஸ்ட் 29 தேதி அன்று பரியமானு நதிப் படுகையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு மரம் வெட்டும் நபர்களை, பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி வில் எய்து கொன்றுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில், 6 பேர் கொண்ட மரம் வெட்டும் குழுவில் 'வில்லியம் வால்ஸ்' என்ற ஒருவர் மட்டும் தப்பியுள்ள நிலையில், மாயமான 3 பேருமே பழங்குடியினரால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  

பழங்ககுடியினரால் அமேசான் காட்டில் இருவர் கொலை செய்யப்பட்டு இருக்கும் செய்தியை வெளியிட்டுள்ள பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுக்காக்கும் அமைப்பான Madre de Dios பகுதியின் நதி மற்றும் துணை நதிகளைப் பாதுகாக்கும் அமைப்பு, மரம் வெட்டுபவர்களுக்கும், பழங்குடியினர்களுக்கும் இதுபோன்று அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், விரைந்து  இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே, பழங்குடியினர் தாக்குதலில் இறந்த இருவரின் உடல்களை மட்டும் அந்நாட்டு போலீசார் மீட்டுள்ள நிலையில், மற்ற மூன்று பேரையும் மீட்கும் பணியானது மோசமான வானிலை காரணமாகத் தொய்வாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. பழங்குடியினருடன் தாக்குதல் நடந்த இடத்தில் சட்ட விரோதமாக மரம் வெட்டப்பட்டதிற்கான ஆதாரமும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்பே அந்நாட்டு அரசு காடழிப்பு மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதிற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், சட்ட விரோதமாக மரம் வெட்டியவர்கள் மீது பழங்குடியினர்  தாக்குதல் நடத்தியுள்ளது எச்சரிக்கை மணி என்கிறது உள்ளூர் பழங்குடியின உரிமை அமைப்பு. தற்போது, தாக்குதல் நடத்திய பழங்குடியினரால், கடந்த 2022 ஆம் ஆண்டில், இரண்டு மரம் வெட்டுபவர்கள் மீன்பிடிக்கும்போது அம்புகளால் சுடப்பட்டும், ஒருவர் பழங்குடியினருடன் நடந்த மோதலிலும் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்