Skip to main content

கனடாவில் ஆட்சியைப் பிடித்த லிபரல் கட்சி; பிரதமராகும் மார்க் கார்னி!

Published on 29/04/2025 | Edited on 29/04/2025

 

 Mark Carney becomes Prime Minister in Canada

கனடாவில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கனடா நாட்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். இதற்கிடையில், தங்கள் கட்சி மீது மக்கள் அதிருப்தியடைந்ததாகக் கூறி ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி அமைச்சர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக ராஜினாமா செய்தனர். மேலும், ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்தது. இது  ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்தது. 

இதற்கிடையில், அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்போம் என்ற ரீதியில் பேசி ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தினார். நாடு முழுவதும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு நிலை சரிந்து வந்ததால், பிரதமர் பதவியிலிருந்தும் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். 

இதையடுத்து, இங்கிலாந்து மற்றும் கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த மார்க் கார்னியை இடைக்கால பிரதமராக லிபரல் கட்சி தேர்ந்தெடுத்தது. அதன் பிறகு அடுத்த பிரதமருக்கான வாக்கெடுப்பில், 85.9% வாக்குகளை பெற்று மார்க் கார்னி பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இடைக்கால பிரதமராக பதவி வகித்து வந்தார். இந்த சூழ்நிலையில், ஏப்ரல் 28ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என கனடா அறிவித்தது. இதில் லிபரல் கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய மார்க் கார்னி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு போட்டியாக, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளராக களமிறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்த நிலையில், 343 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், மார்க் கார்னி பிரதமராக பதவியேற்கவுள்ளார். 

சார்ந்த செய்திகள்