Skip to main content

ஆட்சி கவிழ்ப்புக்கு தலைமை தாங்கியவரையே அதிபராக நியமித்த நீதிமன்றம்!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

mali military coup leader

 

ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அந்த நாட்டில் அப்போதிருந்த ஆட்சி கலைந்து, இடைக்கால அரசு ஏற்பட்டது. மாலியின் அதிபராக பா டாவ்வும் பிரதமராக மொக்தார் உவானேவும் பதவியேற்றுக்கொண்டனர். மேலும், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை வழிநடத்திய இரு இராணுவ வீரர்கள், இடைக்கால அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றனர். ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தலைமை தாங்கிய இராணுவ கர்னல் கொய்டா துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார். 

 

இந்தநிலையில், நேற்று (28.05.2021) கடந்த 24ஆம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரண்டு இராணுவ வீரர்களும் நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இடைக்கால அரசின் அதிபரையும், பிரதமரையும் மாலி இராணுவம் கைது செய்தது. மேலும் பாதுகாப்புத்துறை மந்திரியும் கைது செய்யப்பட்டார். இது அந்த நாட்டில் பதற்றத்தையும், இராணுவ ஆட்சி குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது.

 

மாலி இராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையும், ஆப்பிரிக்க யூனியனும் கூட்டாக கண்டனம் தெரிவித்தன. மேலும், கைது செய்யப்பட்ட அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை உடனடியாக எந்த நிபந்தனையியுமின்றி விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தின. 

 

இந்தநிலையில் அதிகரித்த சர்வதேச அழுத்தம் காரணமாக கைது செய்யப்பட்ட மாலி நாட்டு அதிபரும், பிரதமரும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே மாலி நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம், ஆட்சிக் கவிழ்ப்பை வழிநடத்திய, அதிபரையும் பிரதமரையும் கைது செய்ய உத்தரவிட்ட இராணுவ கர்னல் கொய்டாவை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது. 

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற பிறகு, புதிய அரசை 18 மாதத்தில் அமைக்கவும், அதுவரை இடைக்கால அரசு ஆட்சி செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது இடைக்கால அரசின் அதிபர் மற்றும் பிரதமர் நீக்கப்பட்டு, ஆட்சிக் கவிழ்ப்புக்கு தலைமை தாங்கியவரே அதிபராகியிருப்பது மீண்டும் மாலியில் மக்கள் ஆட்சி அமைவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி நடவடிக்கை; சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர் அரசு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Madagascar government passed the law Action to remove the male factor who misbehave

உலகெங்கிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அதிரடி சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் என்ற நாடு, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மிகக் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, இந்த நாட்டில் வாழும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 133 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில், குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

Next Story

அமேசான் காட்டில் 17 நாட்கள் தவித்த குழந்தைகள்; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

amazon forest flight incident four child recover safety

 

கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனி விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1 ஆம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற விமானமானது அமேசான் வனப்பகுதிக்கு மேலே வான்வெளியில் பறந்தபோது விமானி தங்களது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே விமானமானது, விமான நிலையத்துடன் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

 

இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இந்த தேடுதல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 15 ஆம் தேதி விமானத்தின் சில பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணியில் விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

மேலும் இந்த விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த குழந்தைகள் பற்றிய விபரம் ஏதும் தெரியாத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த 17வது நாளில் 11 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் கடந்த 17 நாட்களாக வனப்பகுதியிலேயே சிறிய அளவில் அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு குடில் போன்று அமைத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கொலம்பியா அதிபர் ட்விட்டரில், இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.