2000ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்து வளர்ந்தவர்களிடம் சூரியக்குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றன என்று கேட்டால், யோசிக்காமல் 9 என்று சொல்வார்கள். ஆனால், 2006ஆம் ஆண்டு புளூட்டோ என்ற கிரகம், ஒரு கிரகமாக இருப்பதற்குத் தகுதியற்றது எனக்கூறி அதை சூரியக்குடும்பத்தின் பட்டியலில் இருந்து நீக்கியது சர்வதேச வானவியல் கூட்டமைப்பு.
ஆனால், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி காரா ஓ’கானர், மீண்டும் புளூட்டோவை ஒரு கிரமாக அங்கீகரியுங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கும் கடிதத்தை எழுதி நாசாவுக்கு அனுப்பியுள்ளாள். எண்ணத்திலும், வார்த்தைகளிலும் மழலைமொழி மாறாமல் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ‘நான் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று, புளூட்டோவை மீண்டும் கொண்டுவாருங்கள் என்ற வரியுடன் நிறைவடைந்தது. அது நடக்கவேண்டும் என்பதே என் விருப்பம். புளூட்டோவை மீண்டும் ஒரு கிரகமாக்குங்கள். நான் பார்த்த வீடியோ ஒன்றில் கடைசி கிரகமாக புளூட்டோ இருந்தது. அதில் இருந்தது போலவே, புளூட்டோவை பூமி, புதன், செவ்வாய் போல மீண்டும் ஒரு கிரகமாக அங்கீகரியுங்கள். பூமியோ, இங்கிருக்கும் யாரோ குட்டி கிரகங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிடக்கூடாது’ என தெரிவித்திருந்தாள். காராவிற்கு எதிர்காலத்தில் நாசாவில் பணிபுரியவேண்டும் என்பதே கனவு என்பதால், நாசாவிற்கே தனது கடிதத்தை அனுப்பி இருக்கிறாள்.
இந்தக் கடிதத்திற்கு நாசாவில் இருந்து பதிலும் கிடைத்துள்ளது. நாசா இயக்குனர் ஜேம்ஸ் கிரீன் தனது பதில் கடிதத்தில், ‘புளூட்டோ குளிராக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், புளூட்டோவிற்கு இதயம் இருக்கிறது என்பதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்? இந்த கண்கவர் உலகில் விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. புளூட்டோவைப் பற்றி நாம் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. நீ புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடிப்பாய் என்று நான் நம்புகிறேன். நீ உன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உன் கனவுகளோடு நாசாவுக்கு வா.. நாங்கள் உனக்காக காத்திருக்கிறோம்’ என எழுதியுள்ளார்.