குறும்புத்தனத்தாலும், விளையாட்டுத்தனத்தாலும் பார்ப்பதற்கே பரவசமூட்டும் பறக்க முடியாத பறவை இனமான பென்குயின்கள் அழிவின் விளிம்பை நோக்கி நகர்ந்து வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக ஆப்பிரிக்க பென்குயின்கள் மிகவும் ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும் அவற்றைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க பென்குயின் என்ற ஒரு இனமே இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகளும் அதனால் இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களாலும் ஏற்கனவே மத்தி, நெத்திலி போன்ற மீன்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட கடல் பகுதிகளில் குறைந்து வருகிறது. இந்த வகை மீன்களை உணவாக எடுத்துக் கொள்ளும் பென்குயின்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே நோய், புயல் கடல், மனிதர்களால் கடலில் சேரும் மாசு என பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி பென்குயின்கள் அவதியுற்று வருகின்றன. எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஆப்ரிக்க பென்குயின்களை காப்பாற்ற முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.