G-20 Conference US President Joe Biden visits India

ஜி20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின்பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில் ஜி - 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் பயணமாகஇந்தியாவிற்கு வர உள்ளார் என்றும், செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்புவார் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இது குறித்து வெள்ளை மாளிகை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜி - 20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை இந்தியாவின் புது டெல்லிக்கு செல்கிறார். அதிபர் ஜோ பைடன் ஜி - 20 நாடுகளின் பிரதிநிதிகளுடன் உலகளாவிய பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்.சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, பலதரப்பு வளர்ச்சி, வங்கிகளின் திறனை அதிகரிப்பது வறுமையை எதிர்த்துப் போராடுவது குறித்து விவாதிக்க உள்ளார்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.