Skip to main content

2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு ட்ரம்ப் மீண்டும் என்ட்ரி 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

Former US President Trump's social media accounts have been unbanned

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் சமூக வலைதளக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2 ஆண்டுகளுக்குப்  பிறகு நீக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் குடியரசுக் கட்சி சார்பாக மீண்டும் ட்ரம்ப் போட்டியிட்டு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டடத்தில் உள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இது அமெரிக்க வரலாற்றில் கருப்பு நாளாகக் கருதப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை ட்ரம்ப்  தனது சமூக வலைதளப் பக்கங்களில் பாராட்டியிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களின் மூலம் மக்களின் மத்தியில் வெறுப்பை விதைத்தாக கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ட்ரம்ப்பின் கணக்குகளுக்குத் தடை விதித்தது. 

 

இந்நிலையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ட்ரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மெட்டா நிறுவனம் நீக்கியுள்ளது. இது குறித்து பேசிய மெட்டா சர்வதேச விவகாரங்களின் தலைவர் நிக் க்ளெக், “2021 அமெரிக்க கலவரத்திற்குப் பின்னர் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்படுகிறது. இருப்பினும் சில விதிமுறைகளும் விதிக்கப்படுகின்றன. மீண்டும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் ஒவ்வொரு விதிமீறலுக்கும் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார். 

 

இதனிடையே எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு கடந்த அண்டு நவம்பர் மாதம் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடை நீக்கப்பட்டது. ஆனால், ட்ரம்ப் இன்று வரை ஒரு ட்விட்டர் பதிவும் கூட வெளியிடவில்லை. ட்ரம்பின் சமூக வலைதளக்கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது ட்ரூத் என்று தனியாக ஒரு சமூக வலைதளத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.

Next Story

“உலகப்போர் ஏற்படும் அபாயம் இருக்கிறது” - டிரம்ப் எச்சரிக்கை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Trump warns There is a risk of world war

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trump warns There is a risk of world war

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தில் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.