பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.
இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அரசு பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, ராவல்பிண்டி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இம்ரான் கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூடவுன் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளே அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.