Skip to main content

"கடினமான முடிவை எடுக்கிறோம்" - புதிய சட்டத்திற்கு எதிராக நடவடிக்கையில் இறங்கிய ஃபேஸ்புக்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

facebook

 

ஆஸ்திரேலியா அரசு சமீபத்தில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய சட்டப்படி, கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பயனர்கள் படிக்கும் உள்நாட்டு செய்திகளுக்காக, அந்தத் தளங்கள் உள்நாட்டு செய்தி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். கூகுள் போன்ற தளங்கள், செய்திகளைப் படிக்க விரும்பும் மக்களிலிருந்து வாடிக்கையாளர்களை உருவாக்கிக்கொள்கிறது. எனவே இந்தத் தளங்கள், செய்தி நிறுவனங்களின் ஊடகவியலுக்கு நியாமான தொகையைத் தர வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு இப்புதிய சட்டத்திற்கான காரணங்களைக் கூறுகிறது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள் ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர், “இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், கூகுள் சர்ச் வசதியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியிருந்தார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "இந்த நாட்டில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களுக்கான விதிமுறைகளை ஆஸ்திரேலியா உருவாக்குகிறது. அதன்படி பணியாற்ற விரும்புபவர்கள் வரலாம். ஆனால் நாங்கள் மிரட்டல்களைக் கண்டுகொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக்கில் செய்திகளைப் பகிர்வதற்குத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம், தங்களுக்கும் செய்தி வெளியீட்டாளர்களுக்கும் உள்ள உறவின் தன்மையை ஆஸ்திரேலிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டம் அங்கீகரிக்கத் தவறிவிட்டதால், இந்த கடினமான முடிவை எடுப்பதாகக் கூறியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமையலரின் மகளை அழைக்கும் அமெரிக்க பல்கலை. நெகிழ்ந்த தலைமை நீதிபதி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The chef's daughter who won the Chief Justice's praise for studying law abroad

டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் சமையல் செய்யும் ஊழியர் அஜய்குமார் சமல். இவரின் மகள் பிரக்யா (25). சட்டப்படிப்பு படித்த பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள இரண்டு முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள பிரபலமான கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்திருக்கிறது. அதனையொட்டி, சட்டமேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரக்யாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திசூட் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் நேரில் வரவழைத்து பாராட்டினர். மேலும், பிரக்யாவுக்கும், அவரது குடும்பத்துக்கும், தலைமை நீதிபதி சந்திரசூட் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

இதனையடுத்து, அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தகங்களை பிரக்யாவுக்கு வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பிரக்யா தனது சொந்த உழைப்பால் இதனை சாதித்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும், அவருக்கு தேவைப்படும் அனைத்தையும் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர் படிப்பை முடித்து மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் எதைச் செய்தாலும், சிறந்து விளங்குவார். மேலும், 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை மிக எளிதாகத் தன் தோளில் சுமந்து செல்வார்” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரக்யா, “எனது தந்தைக்கு  மகளாக இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியம் என்று நினைக்கிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே அவர் எனக்கு உதவியுள்ளார். மேலும் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை அவர் எப்போதும் பெறுவதை உறுதி செய்தார். நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு மூலம், தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுவதை அனைவரும் பார்க்கலாம். அவர் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிப்பார். அவருடைய வார்த்தைகள் விலை மதிப்பற்றவை. அவர் தான் எனக்கு ரோல் மாடல்” என்று தெரிவித்தார். 

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார்.