Skip to main content

காலில் சிக்கிக்கொண்ட வெடிபொருள்! - வெடிகுண்டு நிபுணர்களை அழைத்த மருத்துவர்கள்!!

Published on 01/03/2018 | Edited on 01/03/2018

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ஒருவரின் காலில் சிக்கிக்கொண்ட வெடிபொருளை நீக்க, வெடிகுண்டு நிபுணர்களை மருத்துவர்கள் அழைத்துள்ளனர்.

 

Bomb

 

அமெரிக்காவின் டேக்சாஸ் நகரில் உள்ள சான் அண்டோனியா பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைச் சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவரது தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், கால் பகுதியில் வெடிபொருள் சிக்கியிருப்பதை அந்த நபர் தெரிவித்ததை அடுத்து அங்கு பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எக்ஸ்-ரே தகவல்களும் அதை உறுதிசெய்துள்ளன.

 

இதையடுத்து மருத்துவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மிகவும் விநோதமான இந்த விஷயத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராணுவ வீரரான அந்த நபருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் அந்த வெடிபொருள் அவரது காலில் சிக்கிக்கொண்டது. நேரம் அதிகமானதால் காயம் மேலும் மோசமடைந்தது. அறுவைச் சிகிச்சையின் போது உடலின் திசுக்கள் வெப்பமடைந்து வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க காயத்தில் தொடர்ந்து நீர் ஊற்றி குளிர்வித்துள்ளனர்.

 

இந்த விபத்தில் சிக்கியவர் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளார். இதுவரை பலவிதமான விபத்து சிகிச்சைகளைக் கையாண்டிருந்தாலும், இது புதுவிதமான அனுபவம் தந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மருத்துவரை 18 முறை அரிவாளால் வெட்டிய சம்பவம்; விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
A doctor was slashed 18 times with a sickle in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் ரதி (48). இவர், பஞ்ச்வதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கைலாஷ் ரதி, கடந்த 23ஆம் தேதி அன்று இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, அந்த மருத்துவமனைக்குள் அத்துமீறி ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து, மறைந்திருந்து கைலாஷ் ரதியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கைலாஷ் ரதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கைலாஷ், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள், அங்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வருவதை உணர்ந்த அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கைலாஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தாக்குதல் நடத்திய அந்த நபர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியரின் கணவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் முன்னாள் ஊழியர் 12 லட்ச ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததால் சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மனைவியை வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்த கணவர், மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து மருத்துவரை அரிவாளால் 18 முறை சரமாரியாக வெட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.