Skip to main content

“8 ஆண்டுகளில் நாம் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கியிருப்போம்” - எலான் மஸ்க்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
elon musk about space x attempt 3rd time

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலவிற்கும், செவ்வாய் கோளிற்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஒன்றை உருவாக்கி, அதை செயல்படுத்தும் முயற்சியில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ராக்கெட், 33 என்ஜின்களுடன் 400 அடி உயரத்தில், உலகின் மிகப்பெரிய ராக்கெட் என்ற சிறப்பம்சத்துடன் தயாரானது. 

இந்த ராக்கெட்டின் முதற்கட்ட சோதனை கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நிலையில், ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் ஏவப்பட்ட 4 நிமிடங்களிலே வெடித்துச் சிதறியது. பின்பு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது சோதனை முயற்சி நடத்தப்பட்டது. அப்போது, ராக்கெட்டிலிருந்து விண்கலம் தனியாகப் பிரிந்த பிறகு பூஸ்டர் வெடித்துச் சிதறியது. 

இந்த நிலையில் மூன்றாவது சோதனை முயற்சி, அடுத்த மாதமான பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதும் மூன்றாவது சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க், “இன்றிலிருந்து அடுத்த 8 ஆண்டுகளில் நாம், செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம். நிலவுக்கும் மனிதர்களை அனுப்பியிருப்போம். செவ்வாய்க் கிரகத்தில் வாழ நிறைய வேலைகள் இருக்கிறது. மூன்றாவது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை இந்த ஆண்டு வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமெரிக்கா அதிபர் தேர்தல்; எலான் மஸ்க் முடிவால் திடீர் திருப்பம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
elon musk decide Financing to donald trump

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.  இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். 

அதே வேளையில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் நிதி தேவைப்படுவதால், பல முன்னணி தொழிலதிபர்களை, டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கோரி வந்தார். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்கை டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தேர்தலில் யார் பக்கமும் இல்லாமல் நடுநிலை வகிக்கப் போவதாக எலான் மஸ்க் திட்டவட்டமாக கூறியிருந்தார்.  இருப்பினும் எலான் மஸ்க், டொனால்டு டிரம்பிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்து வந்தன. 

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எலான் மஸ்க் டொனால்டு டிரம்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். 

elon musk decide Financing to donald trump

டிரம்பின் தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டி வரும், ‘கிரேட் அமெரிக்கா பிஏசி’ என்ற அரசியல் அமைப்புக்கு 45 மில்லியன் டாலர் (ரூ.376 கோடி) வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இந்தத் தொகையைத் தேர்தல் முடியும் வரை மாதந்தோறும் வழங்க அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எலான் மஸ்க் தரப்பில் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“8 மாதங்களில் 2 முறை என்னைக் கொல்ல முயற்சி” - எலான் மஸ்க்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
elon musk had faced two assassination attempts in past eight months

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்குத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்து, முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். 

இந்தநிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் காயமடைந்த டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களில் 2 தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக  எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “ஆபத்தான காலம் வரும், கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது. இரண்டு நபர்கள் என்னைத் தனித் தனி சந்தர்ப்பங்களில் என்னைக் கொலை செய்ய முயன்றனர். டெக்ஸாசில் உள்ள டெஸ்லா தலைமையகத்திற்கு அருகில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.