
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றார். தலைநகர் வாசிங்டனில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தீவிரவாத ஒழிப்பு, சைபர் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அந்நாட்டுத் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக, பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தலைவர்களும்வரிக்கொள்கை, எண்ணெய், எரிசக்தி, அணுசக்தி, சட்டவிரோத குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்குத் திரும்ப அழைக்கப் பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டது.
பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவின் அநியாய நடவடிக்கைகளைக்கான எதிர்வினையை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதில், இந்திய சந்தையை நாம் அணுகுவதற்கு இந்தியா அதிக வரியை விதித்திருக்கிறது. அமெரிக்க பொருட்கள் மீது மற்ற நாடுகளை விட, இந்தியாவே அதிக வரி விதிக்கிறது. இந்தியாவில் வணிகம் செய்ய எலான் மஸ்க் விரும்புகிறார், ஆனால் இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுகிறது.
இந்தியா வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான இடமாக உள்ளது, ஏனெனில் வரிகள் உலகிலேயே மிக உயர்ந்த வரிகளைக் கொண்டுள்ளன. மேலும் இது வணிகம் செய்வதற்கு கடினமான இடமாக உள்ளது. நாங்கள் இந்தியாவுடன் பரஸ்பரமாக நடந்து கொள்கிறோம். அமெரிக்கா மீது இந்தியா எவ்வளவு இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை இந்தியா மீதும் விதிப்போம்” என்று கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.