Skip to main content

தாக்குதல் நிறுத்தத்தில் வர்த்தகம்?; இந்தியா மறுத்த பிறகும் டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு!

Published on 14/05/2025 | Edited on 14/05/2025

 

Donald Trump again makes controversial remarks even after India refuses to trade on ceasefire

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. 

இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தத்தை மூன்றாம் நபரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என்பது தொடர்பான விவாதங்கள் நாட்டு மக்களிடம் இருந்து வருகிறது. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு குறித்தும் விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்.

இந்த வேளையில்,  கடந்த 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற இருந்த வேளையில், அமெரிக்கா தான் இந்த தாக்குதலை நிறுத்தியது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக தெரிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். போரை நிறுத்தாவிட்டால் வணிகம் செய்யமாட்டேன் என்று கூறியதை அடுத்து இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக் கொண்டது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தது ஒட்டுமொத்த நாட்டையே பரபரப்பாக்கியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புகொண்டதா? என்ற கேள்வி பா.ஜ.கவினரிடையே எழுந்துள்ளது. இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தாக்குதல் நிறுத்தத்திற்கு பின்னால் வர்த்தகம் தொடர்பான எந்த உரையாடலும் டொனால்ட் டிரம்புடன் நடைபெறவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (13-05-25) தெரிவித்தது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, ‘மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து மே 10 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நிறுத்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்த புரிதல் வரை, இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே இராணுவ நிலைமை குறித்து உரையாடல்கள் நடந்தன. ஆனால், வர்த்தகம் தொடர்பான எந்த விவாதமும் இடம்பெறவில்லை’ எனத் தெரிவித்தது. 

Donald Trump again makes controversial remarks even after India refuses to trade on ceasefire

இந்த நிலையில், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். சவுதி அரேபியாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது, “சமாதானத்தை ஏற்படுத்துபவராகவும், ஒற்றுமையை ஏற்படுத்துபவராகவும் நான் இருப்பது எனக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை தருகிறது. எனக்கு போர் பிடிக்காது. சில நாட்களுக்கு முன்பு, இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் சண்டை எனது தலைமையிலான நிர்வாகம் வரலாற்று சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. போர் நிறுத்தத்தை கொண்டு வர வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன், உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், அவர்கள் இருவருக்கும், மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களும், வலிமைமிக்க தலைவர்களும் உள்ளனர். அதனால், இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டது. அது அப்படியே தொடரும் என நம்புகிறேன்” என்று கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

சார்ந்த செய்திகள்