பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ள கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 1106 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாகப் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 24 சதவீதம் பேர் இளைஞர்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளில் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சூழலில், தங்கள் நாட்டில் இளைஞர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.