Skip to main content

கோத்தபய ராஜபக்சேவுக்கு சீனா வாழ்த்து

Published on 18/11/2019 | Edited on 18/11/2019


இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.  இந்த தேர்தலில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னிலை பெற்ற சஜித் பிரேமதாசா, சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கடும் பின்னடைவை சந்தித்தார்.  வாக்கு எண்ணிக்கை முடிவில், கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.  இதையடுத்து, இலங்கையின் 8-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அந்த நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



சீனாவின் அனுதாபியாக கருதப்படும் கோத்தபய ராஜபக்சேவுக்கு, எதிர்பார்த்தது போலவே, உடனடியாக சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.  இலங்கை அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, " பாராளுமன்ற தேர்தலை இலங்கை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது எங்களுக்கு திருப்தியை தருகிறது. வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சீனாவும், இலங்கையும் நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் முக்கிய கூட்டுறவு கொண்ட நட்பு நாடுகளாகும்.  மரியாதை மற்றும் சமத்துவம், பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இலங்கையின் புதிய தலைமையுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.  பட்டுப்பாதை ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவில் மிகப்பெரிய முன்னேற்றம் ஆகியவை  இருநாடுகள் மற்றும் அதன் மக்களுக்கு உறுதியான பலன்களை கொடுக்கும்" என்றார். 

சார்ந்த செய்திகள்