Skip to main content

‘வாருங்கள் இணைந்து செயல்படுவோம்’ - இந்தியாவிற்கு கனடா அழைப்பு

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Canada calls on India to uphold justice

 

சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதில் கனடா நாட்டில் உள்ள இந்து கோவில்கள் மீது அதிக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.  

 

கனடாவில் உள்ள காலிஸ்தான் புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதில் தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கனடா அரசு தெரிவித்த போதிலும் அங்கு காலிஸ்தான் ஆதரவு குழுக்களின் செயல்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. இந்நிலையில், காலிஸ்தான் புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்.  மேலும், அவர் சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவில் தலைவராகவும் இருந்துள்ளார். இவருடைய படுகொலைக்கு இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக காலிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதையடுத்து ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. கனடாவின் குடிமகன் ஒருவர் படுகொலைக்கு வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்” என அந்நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து கனடா தூதரக உயர் அதிகாரியை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும் கனடாவின் குற்றச்சாட்டையும் மறுத்திருந்தது. இதையடுத்து கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, இந்தியா வரும் கனடா நாட்டினருக்கான விசா சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

 

இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் நீதி வழங்குவதற்கு கனடாவுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டுமென்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்தவும், நீதியை உறுதி செய்யவும், பொறுப்பை நிலை நிறுத்தவும் இந்தியா, கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும். கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்களை கனடா அரசு ஒருபோதும் வெளியிடாது. இந்தியாவும் கனடாவும் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகள். கனடா குடிமக்களை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான பணிகளை அரசு தொடர்ந்து செய்யும். அதில் தற்போது கூடுதல் கவனமும் செலுத்தி வருகிறோம்” என்றார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்