Skip to main content

“தொன்மையான 3 மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது” - எகிப்தில் அப்பாவு பெருமிதம்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Among the 3 ancient languages, Tamil is the most legendary says appavu in Egypt

 

கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் அக்டோபர் மாதம் 03 ஆம் தேதி முதல் 05 வரை 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாகச் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்து கொள்கிறார். இவருடன் சட்டமன்றச் செயலாளர் கி. சீனிவாசன் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராகக் கலந்து கொள்கிறார். மேலும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் பத்ம குமாரும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (26.09.2023) காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து எகிப்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர். அதன்பின்னர் பின்பு அக்ரா நகருக்கு 03.10.2023 அன்று சென்றடையவுள்ளனர். இதையொட்டி பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று துபாய் வழியாக எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார். கெய்ரோவில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு  இன்று (27.9.2023) அந்நாட்டின் செனட் துணை சபாநாயகர் பாஹா எல்டின் ஸுக்கா, தலைமையில் நடைபெற்ற செனட் சபையின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் இந்த கூட்டத்தில், அந்நாட்டின் செனட் செகரட்டரி ஜெனரல் முகம்மது இஸ்மாயில் இட்மேன், இந்திய தூதர் அஜித் குப்தா, அசாம் சட்டப் பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் டைமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு  இந்த கூட்டத்தில் பேசுகையில், “எகிப்தில் முதன் முதலில் தோன்றிய நைல் நதி நாகரீகம் போன்று, இந்தியாவின் வடக்கில் சிந்து சமவெளி நாகரீகமும், தெற்கில் தாமிரபரணி நாகரீகமும் மிகவும் தொன்மையானது. அதேபோல், தொன்மையான மூன்று மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்த பழமையான மொழி இன்றும் இளமையுடன் உள்ளது. நாளையும் இது தொடரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, காலநிலை மாற்றத் தாக்கத்தை குறைத்திடவும், வனங்களைப் பாதுகாத்திடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார். அதே சமயம் 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 07.10.2023 காலை 08.25 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்” - முதல்வர் பதிலடி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Unlike AIIMS Madurai will be completed in time CM response 

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்று வரை நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் கடந்த 20 ஆம் தேதி (20.02.2024) 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதே சமயம் பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.

அந்த வகையில் சட்டபேரவையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் நூலகம் அமைக்கப்படுவது தொடர்பாக நேற்று (21.02.2024) கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளிக்கையில், “சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அமைச்சர் தங்கம் தென்னரசு  பதிலளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருக்கிற காரணத்தால் என்னுடைய வாழ்த்துகளையும் மனதார நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நேற்றைய தினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவிற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதேநேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்  வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அது எங்கே அமையவிருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.

மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும். ஆனால்  வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டு விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Adjournment of TN Legislative Assembly without specifying a date

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 13 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அதனைத் தொடர்ந்து 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் கடந்த 20 ஆம் தேதி (20.02.2024) 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதே சமயம் பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.