அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என அதிரடி உத்தரவுகளை அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் அதிரடி உத்தரவுகள், மற்ற நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 538 பேரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அதிபராக பதவியேற்ற போது, சட்டவிரோத குடியேற்றத்தை சட்டத் திருத்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன் அடிப்படையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணப்பட்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 538 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்ட சூழலில், அவர்களில் 373 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 100க்கு மேற்பட்டவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்காவுற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.