Skip to main content

3000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

egypt

 

பிரமிடுகளுக்கும், மம்மிகளுக்கும் புகழ்பெற்ற நாடு எகிப்து. இந்த நாட்டில் 3000 வருடங்கள் பழமையான நகரம் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 1390 காலகட்டத்தில் எகிப்தை ஆட்சி செய்த அமன்ஹோடெப் III என்பவரது ஆட்சிக்காலத்தில், இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், எகிப்திய பேரரசு செல்வ செழிப்புடன் இருந்த காலகட்டத்தில், பண்டைய எகிப்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தொல்லியலாளர்கள், இந்த நகரத்தில் சேதமடையாத சுவர்கள், வெதுப்பகம், அடுப்புகள், கல்லறைகள், கருவிகள் நிறைந்த அறைகள், மோதிரங்கள், வண்ணப்பானைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் நூற்பு மற்றும் நெசவு, உலோக உற்பத்தி மற்றும் கண்ணாடி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

 

வரலாற்றின்படி தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நகரத்தில் அமன்ஹோடெப் III க்கு சொந்தமான மூன்று மாளிகைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலால் பாதிப்படைந்த எகிப்திய சுற்றுலாத்துறைக்கு, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொல்லியல் துறை, அரசியல் துறையல்ல...” - மத்திய அரசுக்கு கலை இலக்கிய பெருமன்றம் கண்டனம்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

Council of Arts and Literature condemns the central government

 

மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தொல்லியல் அதிகாரி அமர்நாத்தை தீடிரென இடமாற்றம் செய்துள்ளது அதை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென கோரிக்கை வைத்துள்ள தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இது சம்பந்தமாக கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளர் மருத்துவர் த. அறம், தலைவர் எஸ்.கே. கங்கா, பொருளாளர் ப.பா.ரமணி ஆகியோர் விடுத்துள்ள கூட்ட அறிக்கையை பொதுச்செயலாளர் த. அறம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. “மத்தியத் தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலயப் பாதுகாப்பு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் பதவிக்காலம் முடியும் முன்பே டெல்லிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பொதுவாக தொல்லியல் துறையில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட இட மாறுதல் செய்யப்படும். ஆனால், இரண்டு ஆண்டுகள் முடியும் முன்பே அமர்நாத் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இந்த அதிரடி இட மாற்றத்திற்கான எந்தக் காரணத்தையும் தொல்லியல் துறை தெரிவிக்கவில்லை. 

 

2015ல் மத்தியத் தொல்லியல் துறையின் தென் மண்டல அகழாய்வுப் பிரிவுக் கண்காணிப்பாளராக இருந்தபோது அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாய்வுக்கான அனுமதியை வழங்கினார். இந்தக் கீழடி ஆய்வு இந்தியத் தொல்லியல் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்பதை உலகமே நன்கறியும். இந்த ஆய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அற்புதமான நகர நாகரிகம் கீழடியில் தழைத்தோங்கி இருந்திருக்கிறது என்ற பேருண்மை உலகிற்கு வெளிச்சமாகியது.

 

மத்திய தொல்லியல் துறையில் ஒரு அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அது நிறைவுறும் முன்பே, அதன் பொறுப்பு அதிகாரியை மாற்றுவது மரபு இல்லை. இந்த மரபை மீறி, கீழடி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காரணத்தாலேயே, அந்த அகழ்வாய்வுப் பணி நடந்து கொண்டிருக்கும் போதே, அவசரகதியில் அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும், கீழடி ஆய்வுப் பணிகள் முடக்கப்பட்டன என்பதும் நாடறிந்த உண்மை.  பல்வேறு போராட்டங்களுக்குப் பின்தான் மீண்டும் கீழடி அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன என்பதும், கீழடி ஆய்வு அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பிறகே வெளியிடப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே. எனவே கீழடி ஆய்வில் ஒன்றிய அரசு பாரபட்சமான அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

 

2021 அக்டோபரில் சென்னையில் உள்ள மத்தியத் தொல்லியல் துறையின் ஆலயப் பாதுகாப்புக் கண்காணிப்பாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் கீழடி அகழ்வாய்வு குறித்த அறிக்கையைத் தயாரித்து மத்தியத் தொல்லியல் துறைக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கினார். வழக்கம் போலவே மத்தியத் தொல்லியல் துறை அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், சிலைகள், கட்டிடக்கலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து உண்மையான வரலாற்றை வெளியிடும் வகையில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசிடம் அமர்நாத் கோரி இருந்தார். 

 

தமிழக இந்து சமய அறநிலைத்துறை இம்மாதம் 6 ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் பிராதனக் கோயில்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பணிக்கு அனுமதி அளித்தது. இவ்வாறு கீழடி ஆய்விலும், தமிழ்நாட்டு கோவில்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த அதிகாரியான அமர்நாத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. ஓர் அறிவியல் துறையாகச் செயல்பட வேண்டிய தொல்லியல் துறையில் ஒன்றிய அரசின் தூண்டுதலால், மத்தியத் தொல்லியல் துறையும் அரசியல் உள்நோக்கத்தோடு அமர்நாத்தை இடமாற்றம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

 

எனவே பதவிக்கால முடியும் முன்பே அநீதியாக செய்யப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவை மத்தியத் தொல்லியல் துறை  உடனடியாகத் திரும்பப் பெற்று மீண்டும் அதே பணியிடத்தில் அவரைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தொல்லியல் துறை ஓர் அறிவியல் துறை என்பதைக் கருத்தில் கொண்டு, அத்துறை நடவடிக்கைகளில் மூக்கை நுழைத்து அரசியல் பண்ணும் போக்கினை ஒன்றிய பாஜக மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

எகிப்தில் இஸ்ரேலியர்கள் இருவர் சுட்டுக்கொலை!

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Two Israelis shot passed away Egypt

 

இஸ்ரேல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் சமயத்தில், எகிப்தில் இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல் -அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போரை அறிவித்து வான்வெளி, தரைவழி என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இரு தரப்பு மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் எகிப்து நாட்டில் இஸ்ரேலியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் மத்திய பகுதி அலெக்சாண்டிரியாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் அங்கு ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் அந்த  நகரிலுள்ள பாம்பே தூண் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மக்கள் கூடியிருந்தனர். திடீரென, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு போலீஸ் அதிகாரி, துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். இதில், மூன்று பேர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். அதில், இருவர் இஸ்ரேல் நாட்டு பயணிகள் எனவும் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. 

 

இதனைத் தொடர்ந்து, வன்முறையை நிகழ்த்திய போலீஸ் அதிகாரியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து அவ்வாறு நடந்து கொண்டேன் என்று கூறியதாகத் தெரிகிறது.