டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றவர் மார்டினா நவ்ரதிலோவா. தற்போது 66 வயதாகும் மார்டினா டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவருக்குத் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஆரம்பக்கட்ட புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது.
தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சையினைத் துவங்கியபோது மார்பகத்திலும் புற்றுக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து மார்டினாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியதாவது, “மார்டினாவிற்கு கண்டறியப்பட்ட இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் குணப்படுத்தக் கூடியதுதான் எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து மார்டினா கூறுகையில், “இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளன. வலி தீவிரமானது என்றாலும் சிகிச்சை பெற்று குணமடைய முடியும் என நம்புகிறேன். இந்த நோயையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவேன்” எனக் கூறியுள்ளார். 2010ல் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.