சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே நடந்துவரும் சண்டையால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களால் கிழக்கு கோட்டா பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 58 குழந்தைகளும் அடக்கம்.

Syra

இந்தக் கொலைகளை சிரியா நாட்டு அரசு, ரஷ்யாவின் ஆதரவோடு செய்துகொண்டு இருப்பதாகவும், தினமும் அரசின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து மக்களைக் கொல்வதாகவும் கிழக்கு கோட்டா பகுதியைச் சேர்ந்த முகமது நஜெம் எனும் 15 வயது சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களின் ஆதாரங்களை ஆவணப்படுத்தி, அவற்றை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டு வருகிறார்.

உலக மக்களுக்கு சிரியாவில் என்ன நடக்கிறது என்பது தெரியவேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிடும் நஜெம், ‘எங்கள் ரத்தம் உங்களிடம் பிச்சை கேட்கிறது. ஆனால், உங்கள் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இங்கு பசி, படுகாயங்கள் உள்ளிட்டவை சாதாரணமாகி விட்டன. கோட்டா மக்களைக் காப்பாற்றுங்கள்’ என ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisment

தன் நண்பர்கள் பலர் தாக்குதல்களில் செத்துவிட்டதாக நஜெம் ஒரு வீடியோவில் கூறுகிறார். போர் விமானங்கள் தாக்கும்போது அதை செல்பி வீடியோவாக எடுத்து, சிரிய அதிபர் பசர் அல்-அசாத், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் ஈரானின் மூத்த தலைவர் காமினெனி உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிடுகிறார்.

Advertisment

நான் என் படிப்பைத் தொடர்ந்து வருங்காலத்தில் நிருபராக வேண்டும் எனக் கூறும் நஜெம், இந்த இனப்படுகொலையில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என மழலை முகம் மாறாமல் கோருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.