Skip to main content

முதல் வயது பிறந்தநாளுக்கு வந்துடுவேன்னு சொல்லிவிட்டுச் சென்றவர்...பிணமா வரப்போறாரே...! கதறும் இளம் பெண்.

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

youth passes away when he went to foreign for work

 

படித்த படிப்புக்கு இங்க எங்கும் நல்ல வேலையில்லை என புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திட்டக்குடியைச் சேர்ந்த சுரேந்தர் (32), அவரது சொந்தக்காரர்கள் கூறியதற்கேற்ப, கடன் வாங்கி வேலைக்காக சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார்.  

 

இவர், தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஏஜென்டு மூலம் பணம் கட்டி அந்த வேலைக்கு சென்றுள்ளார். முன்னதாக விசாவந்ததை அவர் ஊர்காரர்களிடமும் உறவினர்களிடமும் காண்பித்து, ‘என் மனைவியை நல்லா பார்த்துகோங்க’ என்று கூறி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். விமானம் ஏறப் போகும்போது, தன் 2 1/2 வயது மகனிடம், “அம்மா சொல்றதைக் கேட்டு சேட்டை செய்யாம இருந்துக்கப்பா.. ஊர்ல இருந்து வரும்போது அப்பா உனக்கு ரிமோட் கார் வாங்கிட்டு வருவேன்” என்று சொல்லியுள்ளார்.

 

அதேபோல் தனது ஒரு மாத மகளைக் கொஞ்சிவிட்டு, “உன் பிறந்த நாளைக்கு அப்பா வருவேன்மா.. வரும்போது பொம்மையும் புது சட்டையும் வாங்கிட்டு வறேன்”னு சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். மேலும் தன் 23 வயது நிறைந்த மனைவியிடம் “குழந்தைகளைப் பத்திரமா பார்த்துக்க, உன் உடம்பையும் பார்த்துக்க. கவலைப்படாம நேரத்துக்குச் சாப்பிட்டனும். நம்ம குழந்தை முதல் பிறந்தநாளுக்கு லீவு கிடைச்சா ஊருக்கு வந்துட்டுப் போறேன்” என்று சொல்லி கண்கலங்கிவிட்டு சென்றுள்ளார் சுரேந்தர்.

 

சிங்கப்பூர் சென்று இறங்கியதும் கரோனா தடுப்பு விதிமுறை காரணமாக சுரேந்தரை தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் காய்ச்சல் இருந்ததால் வேலைக்கு அனுப்பவில்லை. நண்பர்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். 2 மாதமாக வேலைக்குச் செல்லாமல் அறையில் இருந்தார். இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு சுரேந்தர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. இதைக் கேட்டதில் இருந்து பச்சைக்குழந்தையைக் கையில் வைத்திருக்கும் அவரது மனைவி கதறி அழுதே மயங்கி விழுந்தார்.

 

ஆறுதல் சொல்ல முடியாமல் உறவுகளும் சில நாட்களாக வருத்தத்திலேயே இருந்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் உள்ள சிலர் உதவியுடன் சுரேந்தர் உடலை ஊருக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்துவருவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர். ‘வாங்கிய கடனை இனி யார் கட்டுவார்? போன இடத்திலிருந்து ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லையே’ என்று சொல்லும் உறவினர்கள், ‘சின்ன வயசுலயே இப்படி நடந்துவிட்டதே, குழந்தைகளை வளர்க்கவும், வாங்கி கடனைக் கட்டவும் ஒரு வேலை கொடுத்தாங்கன்னா நல்லா இருக்கும். யாரு ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பொண்ணுக்கு ஒரு வேலை கொடுக்கணும்’ என்கிறார்கள்.

 

“மகளோட முதல் பிறந்தநாளுக்கு வருவேன்னு சொன்னீங்களே.. இப்ப பிணமா வரீங்களே” என்று கதறுகிறார் சுரேந்தர் மனைவி. இந்த அழுகுரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.